நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்பம், துன்பம் என அனைத்திற்கும் நமது கர்மாவே காரணம் என சொல்லப்படுகிறது. இந்த கர்மாவை நாம் அனுபவித்து மட்டுமே கழிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அவைகள் முழுவதுமாக நம்மால் அனுபவிக்கப்பட்டு, கழிக்கப்படும் வரை மீண்டும் மீண்டும் பிறவிகளும், அந்த பிறவிகளில் கர்மாவும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என சொல்லப்படுகிறது. அப்படி அனைவராலும் சொல்லப்படும் கர்மா என்றால் என்ன? இது பற்றி பகவத்கீதையில் கிருஷ்ணர் என்ன சொல்ல இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒருவர் செய்யும் செயல்களும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே கர்மா என அழைக்கப்படுகிறது. இது தற்போதைய வாழ்க்கையிலோ அல்லது முற்பிறவிகளிலோ செய்ததாக இருக்கலாம். இந்த கர்மாக்களே ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. இதை மனிதர்கள் விதி என்கிறார்கள். ஆனால் விதி வேறு; கர்மா என்பது வேறு. இறைவனால் உங்களுக்கு என்று கொடுக்கப்பட்டதே விதி. ஆனால் கர்மா என்பது, உங்களால் செய்யப்படுவது. இந்த கர்மாவை தான் ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் அவரவரே எழுதுகிறார் என குறிப்பிடுகிறார்கள். செயல், அந்த செயலின் பயன், நோக்கம் போன்றவற்றை கர்மா என்கிறோம்.
உனக்காக கொடுக்கப்பட்ட கடமைகளை செய்வதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு. அந்த செயல்களால் ஏற்படும் பலன்களை பெறுவதற்கு உனக்கு உரிமை இல்லை. உன்னால் செய்யப்படும் செயல்களின் விளைவுகளுக்கு நீங்கள் காரணமோ, பொறுப்போ கிடையாது. அதனால் செயல்களின் விளைவுகளின் மீது கவனம் செலுத்தாதீர்கள். எந்த ஒரு காரியத்தில் ஈடுபடும் போதும் அதன் விளைவுகளின் மீது பற்றும், கவனமும் செலுத்தாதீர்கள். உயிர், உடலை விட்டு பிரியும் போது, ஆன்மாவானது மற்றொரு உடலுக்குள் செல்கிறது. அதே போல் கர்மாவும், ஒரு பிறவியில் இருந்து மற்றொரு பிறவிக்கு தொடரும். கர்மாக்களின் அடிப்படையிலேயே அடுத்த பிறவியானது அமையும். அடுத்தடுத்த பிறவிகளில் நம்முடைய பயணம், கர்மாவின் அடிப்படையிலேயே செல்கிறது. கர்மாவின் சக்தி என்ன என்பதை மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
செயல்களின் மீது பற்று இல்லாமல் எவர் ஒரு ஈடுபட்டு, அதன் பலன்களை பரமாத்மாவிடம் ஒப்படைக்கிறாரோ உண்மையில் அவர் ஞானம் பெற்றவர். அதனால் எந்த காரியத்தை செய்யும் போதும் சுயநலமின்றி, எதையும் எதிர்பார்த்தும் செய்யக் கூடாது. கர்மா என்பது நம்முடைய வாழ்வில் நடக்கும் நன்மை, தீமை ஆகிய செயல்களின் கூட்டுத் தொகை தான். இது நம்முடைய எதிர்காலத்தை அல்லது விதியை நிர்ணயிக்கிறதே தவிர நம்முடைய பிறவி பயணத்தை பாதிக்காது. நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நிர்ணயிப்பதில் கர்மாவின் பங்கு மிக முக்கியமானதாகும்.
உடல் தான் அழியக் கூடியதே தவிர ஆன்மா அழிவது கிடையாது. ஆன்மாவின் பயணம் என்பது கர்மாவால் திரட்டப்பட்ட வாழ்நாளை கொண்டது. எப்போது கர்மா முற்றிலுமாக கழிக்கப்படுகிறதோ அப்போதே ஆன்மா நித்தியமாகிய பரமாத்மாவை அடையும். தூய்மையான நோக்கத்துடன், சுயநலமில்லாமல் செய்யப்படும் செயல்களே நல்ல கர்மாவை ஏற்படுத்துகிறது. இது ஆன்மிக வளர்ச்சிக்கும், முக்தியாகிய இறுதி நிலையை அடைவதற்கும் உதவுகிறது. கர்மாவின் நியதிகளை புரிந்து கொண்டவர்கள், ஒவ்வொரு செயலுக்குள் ஒரு விளைவு உண்டு என்பதை அறிகிறார்கள். அவர்களின் நல்ல மற்றும் நேர்மையான செயல்கள் அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. புத்திசாலிகள், தங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய செயல்களின் மீது கவனம் செலுத்தி, அவற்றை சிறப்பாக வடிவமைக்கிறார்கள்.
கருணை இல்லாமல் அல்லது கொடுமையாக செய்யப்படும் சிறிய செயல்களும் கூட எதிர்காலத்தை பாதிக்கும் நிகழ்வுகளை ஏற்படுத்தலாம். அதனால் நீங்கள் உருவாக்கும் கர்மா எது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். கர்மா என்பது தலைவிதி அல்ல. தனிப்பட்ட விருப்பத்தின் விளைவு. புத்திசாலித்தனமாக தேர்வு செய்து செயல்படுவதன் மூலமாக விதியையே மாற்ற முடியும். கர்மாவை புரிந்து கொள்வதால், அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளின் சுழற்சியை புரிந்து கொள்ள முடியும். இந்த புரிந்தல் பிறப்பு-இறப்பு சுயற்சியில் இருந்து விடுபட வழிகாட்டும். மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதில் இருந்து விடுபட்டு, முக்தி அல்லது மோட்சம் என்னும் இறை தன்மையை அடைய கர்மாவின் மீதும், நாம் செய்யும் செயல்களின் மீது கவனம் செலுத்த வேண்டும்.